Tuesday 30 October 2018

”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” - செந்தில் ஆறுமுகம் கட்டுரை

”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி இது. ஒட்டுமொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், பல அரசியல் கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்டுவரும் கேள்வியும் இதுவே.
என்னதான் பிரச்னை?
இந்திய அரசியல் சாசனத்தின் 73 வது மற்றும் 74வது திருத்தத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளான கிராமப் பஞ்சாயத்துகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு முறையாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பொறுப்பான அமைப்பு “மாநிலத் தேர்தல் ஆணையம்” ஆகும். 1996 முதல், உள்ளாட்சித் தேர்தல்கள் எந்தப்பிரச்னையும் இன்றி 2001, 2006, 2011 என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2011ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்தது. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி தேர்தல் தேதிகளை அறிவித்தது. 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டன. கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், சுயேச்சைகள் என அனைத்துத் தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்த இறுதி நாளுக்கு அடுத்த நாளன்று(அக் 4,2016) சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறது. ஏன் ? உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முறையாகப் பின்பற்றாமல் அவசரகோலத்தில் தேர்தலை அறிவித்த முறை சட்டத்திற்குப் புறம்பானது என்ற முடிவுக்கு உயர்நீதிமன்றம் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், திமுக தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,. ஆனால், திமுக போட்ட வழக்கு என்னவெனில் பழங்குடியினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முறையான பிரதிநிதித்துவம்/இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதுதான். ஆனால், திமுகவின் இடஒதுக்கீடு குறித்தான வாதத்தை ஏற்காத நீதிமன்றம் மேற்சொன்ன வேறொரு காரணத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது. அதேசமயத்தில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதாவது, டிசம்பர் 2016க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் அணுகுமுறைகளைப் பார்த்தால் டிசம்பர் 2019க்குள் கூட தேர்தல் நடத்தி முடிக்கப்படாது என்பதுபோல் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் நடத்தப்படாத இந்தப் பின்னணியில்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தி.மு.க.வால் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போதுதான் நீதிமன்றம் “…”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” என்று கேள்வி கேட்டதோடு, இத்தேர்தல் நடத்தப்படாமல் போனதற்குக் காரணமான உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
திமுக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மற்றொரு வழக்கை(2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு வரையறைகள் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி) கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக அரசு, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் எல்லைகள் மாற்றப்பட உள்ளன. அதனால், புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும். இந்தப் பணிகள் முடிந்தபிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்தமுடியும் என்று கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாக கிளிப்பிள்ளை போல் நீதிமன்றத்தில் பதிலளித்து வருகிறது தமிழக அரசு. ஆனால்,
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவை தமிழக அரசு சொல்லும் எந்தக்காரணங்களும் ஏற்புடையவை அல்ல, உடனே தேர்தலை நடத்துங்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டது.
நீதிமன்றங்கள் இவ்வளவு வலியுறுத்தியும் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்குவது ஏன்.? காரணம் சட்டச்சிக்கல் அல்ல, அரசியல் சிக்கல். இரட்டை இலைச் சின்னம் பெற்ற பிறகும் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்தால் முதல்வர், துணைமுதல்வர் அணிகளுக்கு இடையே உள்ள பிளவு அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு வரும். எந்த அணிக்கு எவ்வளவு சீட் கொடுப்பது என்பதில் இழுபறி நிலை ஏற்படும். ஒருவேளை, ஆர்.கே. நகரில் தோற்றதுபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியைத் தழுவினால் அது ஆளுங்கட்சிக்கு அவமானமாகிவிடும். அது அடுத்த ஆண்டு வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, “உள்ளாட்சித்” தேர்தல் நடத்தினால் “உள்ள” ஆட்சியும் ஆட்டம் கண்டுவிடுமோ என்று அதிமுக அரசு தேர்தல் கணக்குப்போடுகிறது. இதுபோன்ற அரசியல் காரணங்களாலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. உண்மையில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை.
”மாநில சுயாட்சி” வேண்டி உரத்த குரல்கொடுத்த தமிழகம் இன்று “கிராம சுயாட்சியை” புறந்தள்ளுவது வேதனையளிக்கிறது. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படக்கூடாது, அது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரினோம் நாம். ஆனால், மாநிலத்தின் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளோடு பகிர்ந்துகொள்ள தமிழகம் தயாராக இல்லை என்பதையும் தாண்டி உள்ளாட்சித் தேர்தலையே நடத்ததாமல் 2 ஆண்டுகள் இழுத்தடித்துவிட்டு, தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று உள்ளாட்சித் தேர்தல் அந்தரத்தில் தொங்கும் நிலை வேதனையின் உச்சகட்டம்.
04.10.2016 அன்று உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டார் நீதிபதி.கிருபாகரன் அவர்கள். அந்தத் தீர்ப்பின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் இந்த வரிகளை மேற்கோள் காட்டினார்:
“.… உண்மையான ஜனநாயகம் என்பது மத்தியிலும், மாநிலத்திலும் ஒருசிலர் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வதல்ல. அது, ஒவ்வொரு கிராம மக்களும் ஆட்சியில் பங்கேற்பதே”
காந்தியின் கனவுப்படி, அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்க வழிவகுக்கும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் இனியும் தாமதிக்காமல் நடத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

- செந்தில் ஆறுமுகம்

No comments:

Post a Comment